புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலை அமைப்பது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வைத்தியலிங்கம் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று (செப்.1) செய்தியாளர்களைச் சந்தித்த வைத்தியலிங்கம் எம்.பி., 'புதுச்சேரி பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மதுபானத்தொழிற்சாலை அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. மதுபான ஆலை தொடங்க அனுமதி தருவதற்கான முகாந்திரம் என்ன? அதாவது அந்த மதுபான தொழிற்சாலையால் புதுச்சேரியைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்? புதுச்சேரி அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.
தொடர்ந்து, இதுபற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு பதில் தரும் என்று எதிர்பார்த்த நிலையில் பதில் தரவில்லை. அதிக குடிநீரை எடுத்து பயன்படுத்தக்கூடிய ஆலைக்கு எப்படி அனுமதி தருகின்றனர்? நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீரைத்தான் எடுக்க வேண்டும் என்ற மாசு கட்டுப்பாட்டு உத்தரவையும் முடக்கம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
புதுச்சேரியில் ஏற்கெனவே, குடிநீர் பற்றாக்குறை உள்ளநிலையில் அதிக நிலத்தடி நீரை எடுக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தருவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். அதோடு மட்டுமின்றி மதுபான தொழிற்சாலைக்கு அனுமதியளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதை ஆளும் கட்சி உறுப்பினர்களும், ஆதரவு அளித்துவரும் உறுப்பினர்களும் சட்டசபையில் பதிவு செய்துள்ளனர். எனவே, புதிய மதுபான தொழிற்சாலை அமைப்பது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அதாவது 2001ஆம் ஆண்டு 140 மதுக்கடைகள் மட்டுமே புதுச்சேரியில் இருந்தது. ஆனால், ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு 500 மதுக்கடையாக உயர்ந்துள்ளது' என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பாஜகவினர் மீது அவதூறு வழக்குத்தொடர்ந்த கேசிஆர் மகள் கவிதா