உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளால் ஏற்பட்ட தாக்கம் குறித்து நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியும், இந்திய மலையேறுதல் அறக்கட்டளையின் உறுப்பினருமான சுதிர் குட்டி தலைமையில் ஓம் பர்வத், தர்மா, வியாஸ் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல்லுயிர்ச்சூழலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை நிபுணர் குழு உத்தரகாண்ட் மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
இந்த ஆய்வு குறித்து சுதிர் குட்டி ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார்போல் ஆதி கைலாஷ், ஓம் பர்வத், வியாஸ் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு, சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உத்தரகாண்ட் அரசு, இமயமலையின் பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படாத வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆதி கைலாஷ், ஓம் பர்வத் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பல்லுயிர்ச்சூழல் அழிந்துவிடும். பத்ரிநாத், கேதர்நாத் பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் வருகையால் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து வருகின்றன. இதுபோன்ற நிலை பிற பகுதிகளிலும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்" என்று கூறினார்.
மலையேறும் நிபுணர்கள் கூறுகையில், "ஆதி கைலாஷ், ஓம் பர்வத் உள்ளிட்ட பகுதிகளில் தற்போதுதான் சுற்றுலாத்துறை வளர ஆரம்பித்துள்ளது. அதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்பு