உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள், 17 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் நேற்று (நவ.28) மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியில் தேசிய மற்றும் மாநிலர் பேரிடர் மீட்பு படைகள் தவிர்த்து வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிபுணர்கள் பலர் ஈடுபட்டனர். அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்.
யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் உள்ளார். கட்டுமான பணிகளில் ஏற்படும் ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் அர்னால்ட் டிக்ஸ் நிபுணத்துவம் பெற்றவர்.
மேலும் நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவது மற்றும் சுரங்கப்பாதை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பதில் நிபுணராக காணப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் அர்னால்ட் டிக்ஸ் பணியாற்றி வருகிறார்.
நிலத்தடி தொடர்பான பணிகள், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கலான அபாயங்களை கண்டறிந்து தீர்க்கும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட அண்டர்கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்ஸ் என்ற அமைப்பின் உறுப்பினராகவும் அர்னால்ட் டிக்ஸ் உள்ளார். உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்பதற்காக கடந்த நவம்பர் 20ஆம் தேதி அர்னால்ட் டிக்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்டார்.
அர்னால்ட் டிக்ஸ் தலைமயிலான அணி, தேசிய மற்றும் பேரிடன் மேலாண்மைக் குழுவுடன் இணைந்து சில்க்யரா சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை நேற்று (நவ.28) பத்திரமாக மீட்டது. இந்த மீட்பு பணி குறித்த செய்திகள் சர்வதேச அளவில் பரவிய நிலையில், அர்னால்ட் டிக்ஸ் கவனிக்கத்தக்கவராக மாறி உள்ளார்.
இந்நிலையில் மீட்பு பணியை தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அர்னால்ட் டிக்ஸ், "41 தொழிலாளர்கள் மீட்டது வியக்கத்தக்க ஒன்று என்றார். மேலும், மீட்பு பணியில் தங்களுக்கு தேவையானது எது என்பதை அறிந்து பொறுமையுடன் செயல்பட்டதாகவும், சிறந்த அணியுடன் பணியாற்ற முடிந்ததாகவும் அவர் கூறினார்.
தொடக்கத்தில் மீட்பு விரைவாக நடக்கும் உறுதி கூற முடியாத நிலையில் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்கள் வீட்டில் இருப்பார்கள் என தான் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்தியாவில் திறமையான பொறியாளர்கள் இருப்பதாகவும், வெற்றிகரமான திட்டத்தில் இணைந்து இருப்பதை மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் யார்? ராகுல் டிராவிட் குறித்து பிசிசிஐ முடிவு!