உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளும் பாஜக அமைச்சர் ஹரக் சிங் ராவத் அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி அம்மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டுவந்த நிலையில், இவர் மீது முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
வரும் தேர்தலில் ஹரக் சிங் தன்னுடன் சேர்த்து தனது மருமகளுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாஜகவோ குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து, கட்சி நடத்திய வேட்பாளர் தேர்வு கூட்டத்தை ஹரக் சிங் புறக்கணித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனக் கூறப்படுகிறது.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.
இதையும் படிங்க: Covid-19 India: ஓராண்டை நிறைவு செய்த தடுப்பூசி திட்டம் - சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு