டேராடூன்: உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து உத்ரகாண்டிலும் பெருவாரியான இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. உத்ரகாண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 இடங்களை வென்று அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
பாஜக ஆட்சியைக் கைப்பற்றினாலும், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட ஹதிமா தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
இந்நிலையில், புஷ்கர் சிங் தாமியும், அவரது அமைச்சரவையும் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை உத்ரகாண்ட் ஆளுநர் குர்மித் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தாமி, 'எங்களது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால் நாங்கள் ராஜினாமா செய்துள்ளோம். இருப்பினும், ஆளுநர் எங்களை, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை ஆட்சியைத் தொடரும்படி கேட்டுக்கொண்டார்' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் மக்களிடம் இருந்து அதிக அன்பையும், வரலாறு காணாத வெற்றியையும் பெற்றுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் உடனடியாக பொது சிவில் சட்டம் - தோல்வியடைந்த முதலமைச்சர் அறிவிப்பு