லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயிலும் மருத்துவர்கள், தங்களது படிப்பை முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாமல், லாப நோக்குடன் தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர்கின்றனர்.
இதனால் மாநிலத்தில் சுகாதார வல்லுநர்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உத்தரபிரதேச பொது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதில், மருத்துவக் கல்லூரியில் முதுகலை (பி.ஜி) படிப்பை முடித்து அரசு மருத்துவமனைகளில் பத்து ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
படிப்பை முடித்த பின்னர் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேற விரும்பும் மருத்துவர்கள் மாநில அரசுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அலுவலர்கள் கூறும்போது, "அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய மட்டுமே, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) விலக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு வருடம் பணிபுரியும் இளநிலை மருத்துவர்களுக்கு முதுகலை படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் 10 மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 20 மதிப்பெண்கள் வரை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு 30 மதிப்பெண்கள் வரை தளர்வு வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது. இந்த மருத்துவர்கள் முதுகலை படிப்புடன் டிப்ளோமா படிப்புகளிலும் சேரலாம்.
தற்போது, அரசு மருத்துவமனைகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களில், சுமார் 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன" என்றனர்.
இதையும் படிங்க: ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாளை சிகிச்சையை தவிர்க்கும் இந்திய மருத்துவர் சங்கம்!