பரெய்லி : உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்கு பின்னும் காதலருடன் உறவில் இருந்த மகள் மீது ஆசிட் வீசிய தந்தை உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். பரெய்லி மாவட்டம் அக்ராஸ் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. காதல் திருமணம் செய்ய விரும்பிய பெண்ணை வேறொரு இளைஞருக்கு மணம் முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம் திருமணத்திற்கு பின்னும் தன் காதலருடன் அந்த பெண் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. புகுந்த வீட்டிற்கு தெரியாமல் காதலரை அந்த பெண் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் காதல் விவகாரம் அவரது கணவர் வீட்டாருக்கு தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து இரு தரப்பினரும் பெண்ணை அழைத்து பேசிய போதும் அவர் காதலை கைவிட ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண்ணின் தந்தை, உள்ளிட்ட உறவினர்கள் 4 பேர், வன பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் கழிவறை சுத்தப்படுத்தும் ஆசிட்டை கொண்டு பெண் மீது அவரது தந்தையும், உறவினர்களும் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சுற்றி இருந்தவர்களை வருவதை அடுத்து தந்தை, உள்ளிட்டோர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று உள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தை தோத்தாராம் மற்றும் உறவினர் தினேஷ் ஆகியோரை கைது செய்ததாக போலீசார் கூறினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான உறவினர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கு - நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுதலை! சிபிஐ சிறப்பு நிதிமன்றம் தீர்ப்பு!