மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் நேற்று(பிப்.4) திருமணமான பெண்மணி ஒருவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அந்த இளைஞரின் பிடியில் சிக்கிய பெண்மணி தப்பிக்க வழிதேடினார். அப்போது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த நபரின் உதட்டை கடித்து துப்பிவிட்டார். உடனே அந்த நபர் வலியில் கதறித் துடித்தார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தப்பிய பெண்மணி சத்தமிட்டு ஊர் மக்களை கூப்பிட்டார்.
சத்தம் கேட்ட கிராம மக்கள் விரைந்து வந்து இளைஞரைப் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது துண்டான உதட்டையும் மீட்டனர். தற்போது அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பெண்மணியின் கணவர் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் லவாட் நகரைச் சேர்ந்த மோஹித் சைனி என விசாரணையில் தெரியவந்துள்ளது.