ராம்பூர் : உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அசாம் கானை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மக்களவை தேர்தலை முன்னிட்டு ஷேஷாத் நகர் அடுத்த தமோராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அசாம் கான், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராம்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ராம்பூர் மாவட்ட வளர்ச்சி அதிகாரி அனில் குமார் சவுகான் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து வழக்கு எம்.பி./ எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி சோபித் பன்சல், அசாம் கானை குற்றவாளி என அறிவித்தார்.
மேலும், அசாம் கானுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும். சிறப்பு நீதிமன்றம் அசாம் கானுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு உள்ளூர் நீதிமன்றம் அவதூறு வழக்கு ஒன்றில் அசாம் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி இருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அசாம் கான் சட்டமன்ற உறுப்பினர் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த மே மாதம் உள்ளூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அசாம் கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட எம்.பி./ எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் 3 அண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை, எதிர்பாராத விதமாக அசாம் கானுக்கு வழங்கி வந்த Y தர பாதுகாப்பை உத்தர பிரதேச மாநில அரசு திரும்பப் பெற்றது. மேலும் அசாம் கானுக்கு அடிப்படை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என போலீசார் தெரிவித்து இருந்தனர். முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவருமான அசாம் கானுக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்!