லக்னோ : 2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிப்.1ஆம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட்டை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றுள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இது ஒரு முற்போக்கான பட்ஜெட். இந்தப் பட்ஜெட்டினால் அனைத்துப் பிரிவினரும் பயனடைவார்கள்.
குறிப்பாக விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள். விவசாய பொருள்கள் குறைந்தப்பட்ச கொள்முதல் விலை உயர்வு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கை ஆகும்.
மேலும், 60 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மிஷன் சக்தி போன்ற திட்டங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்கள் ஆகும். இது போன்ற அறிவிப்புகள் நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்” என்றார்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், “மாணவர்களுக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் உருவாக்கப்படும். டிஜிட்டல் முறையில் கற்ப்பித்தல் ஊக்குவிக்கப்படும்.
1-12ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும். ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் கூடுதலா 200 கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும். இ-பாஸ்போர்ட் நவீனப்படுத்தப்படும்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் மகளிர் மேம்பாட்டை கவனத்தில் கொண்டு, “சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0” உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : budget 2022: பர்வத் மாலா திட்டம்- நிதின் கட்கரி வரவேற்பு