உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2023-ம் ஆண்டு இறுதிக்குள் கீழ்த்தளத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு, அந்த ஆண்டே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருவறைக்கு அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, ராமர் கோயில் துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருவறை கட்டும் பணிகளை முன்னிட்டு, பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "மக்கள் இந்த நாளுக்காகத்தான் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். ராமர் கோயில் இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: கேரள பெண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ நீதிமன்றம் அனுமதி