டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் (ஆக.08) முடிவுக்கு வந்த நிலையில், இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்று ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நிறைவு செய்தது.
மொத்தம் 200க்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக்கின் 17ஆவது மற்றும் இறுதி நாளான நேற்று கண்கவர் வானவேடிக்கைகளுடன் எளிய முறையில் போட்டிகள் நிறைவுபெற்றன.
கொடியேந்தி தலைமை தாங்கிய பஜ்ரங் புனியா
இதில் நடந்த விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இந்தியக் கொடியை கையில் ஏந்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வீரர்கள் உற்சாகமாக நடனமாடியும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த ஆண்டு ஒலிம்பிக்கில், இந்தியா முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சிறப்பான முறையில் பதக்கப் பட்டியலில் முன்னேறி நிறைவு செய்துள்ளது.
பதக்கம் வென்ற வீரர்கள்
13 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிம்பிக் அரங்கில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வென்ற தங்கத்தால் ஒலித்தது.
மேலும், பஜ்ரங் புனியா (வெண்கலம்), மீராபாய் சானு (வெள்ளி), பிவி சிந்து (வெண்கலம்), லவ்லினா போர்கோஹெய்ன் (வெண்கலம்), ஆண்கள் ஹாக்கி அணி (வெண்கலம்), ரவிக்குமார் தஹியா (வெள்ளி) ஆகியோர் டோக்கியோ விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலகத்திற்கே நம்பிக்கை அளித்த ஒலிம்பிக்ஸ்
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், முழு உலகிற்கும் இப்போட்டிகள் நம்பிக்கையை அளிப்பதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக் முன்னதாகத் தெரிவித்தார்.
"இந்த ஒலிம்பிக் போட்டிகள் சரியான நேரத்தில் நடந்தது என நாங்கள் நம்பிக்கையுடன் சொல்ல முடியும், நாங்கள் யாருக்காக இவற்றை தயார்படுத்தினோமோ, அந்த விளையாட்டு வீரர்கள் எங்களை மிகவும் பாராட்டினார்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், ஒலிம்பிக் சமூகத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது "என்றார்.
2024 ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா 2, சீனா 274 - ஒலிம்பிக் உணர்த்தும் பாடம் என்ன?