டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் அது உலக நாடுகளுக்கு பரவி உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் பின்னர் சீனாவை உலக நாடுகள் மட்டும் அல்லாது அனைத்து மக்களும் உற்று நோக்கத் துவங்கி விட்டனர். இந்நிலையில் சீனாவில் H9N2 (ஏவியன் இன்ஃப்ளுயன்சா வைரஸ்) தொற்றும் குழந்தைகள் மத்தியில் சுவாசப் பிரச்சினையும் ஏற்பட்டு உள்ளது.
இதனை கவனித்த உலக சுகாதார அமைப்பு சீன அரசிடம் தொற்று குறித்து விரிவான அறிக்கையைக் கேட்டு உள்ளது. இந்நிலையில் சீனாவில் பரவி வரும் தொற்று குறித்து மத்திய சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், "சீனாவில் பரவி வரும் H9N2 தொற்று மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச நோய் பாதிப்பு குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த எச்9என்2 தொற்று மற்றும், சுவாச நோய் பிரச்சினை இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்பு குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. எத்தகைய சுகாதார அவசர நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இதுபோன்ற சுகாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒருங்கிணைந்த செயல்திட்டத்திற்கான அனுகுமுறையை இந்தியா துவங்குகிறது.
கரோனா தொற்றுக்கு பின்னர் சுகாதார கட்டமைப்பு வெகுவாக வலுப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு (PM-Ayushman Bharat Health Infrastructure Mission) மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார அமைப்புகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கரோனா தொற்றுக்கு பின்னர் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் நோய் கண்டறிதல் மற்றும் கண்காணித்தல் அமைப்புகள் சவாலான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!