புதுச்சேரி: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிலையில் பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப். 12) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு வருகின்றோம். 2014க்கு பிறகு துப்பாக்கிச்சூடு போன்ற எந்த சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை. அந்த அளவிற்குத் தமிழ்நாடு மீனவர்களை மத்திய அரசு பாதுகாத்து வருகின்றது. கடந்த 70 ஆண்டுகளில் முதன்முறையாக மீனவர்களுக்கு ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த பட்ஜெட்டில் 70 விழுக்காடு கூடுதல் நிதி மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பாக மீண்டும் சுமுக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது" என்று தெரிவித்தார்.
திருமாவளவனுக்கு தகுதியில்லை
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது, "இது ஒரு ஜனநாயக நாடு. எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். தீண்டாமையைக் கடைப்பிடிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்தவர்கள்தான் பாஜகவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகுந்த பயத்தில் உள்ளார். நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறார். பிறமாநிலங்களில் பட்டியலினத்தவர், நிதித்துறை போன்று முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர் கடைசி பட்டியலில் உள்ளார். அதை திருமாவளவன் எதிர்த்துக் கேட்டிருக்க வேண்டும். ராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் இதிகாசங்கள். அதைப்பற்றிப் பேச திருமாவளவனுக்குத் தகுதியில்லை" எனக் கூறினார்.
முன்னதாக, புதுச்சேரியில் கடந்த சில நாள்களுக்கு முன் விசிக தலைவர் திருமாவளவன், ' பாஜகவுக்கு அரசியலமைப்பு சட்டம் அவர்களின் தேசிய நூலான பகவத்கீதைதான். அந்த அரசியலமைப்பு சட்டத்தை வணங்கிவிட்டுத்தான் மோடி பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்' என கூறியிருந்தார்.
மேலும், புதுச்சேரியில் பிரதமரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது எனவும் தென்னிந்தியாவில் முதன்முறையாகப் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது பெருமை சேர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமாயணம், மகாபாரதம் குறித்து திருமா சர்ச்சைப் பேச்சு