சென்னை: பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து, இந்திய உணவு கழகத்தின் (தென் மண்டலம்) தலைமை இயக்குநர் ஆர்.டி நஸீம், தமிழ்நாடு பொது மேலாளர் ஜே.எஸ் சிஜூ ஆகியோர் சென்னையில் இன்று (ஜூலை 5) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அவர்கள் கூறியதாவது," தமிழ்நாடு, புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
கரோனா பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து ஏழைகளை பாதுகாப்பதற்காகவும், உணவின்றி யாரும் வாடக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கிலும், பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசு தொடங்கியது.
இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், கரோனா இரண்டாம் அலையைக் கருத்தில் கொண்டு, இந்தாண்டு நவம்பர் வரை பிரதமரால் மேலும் நீட்டிக்கப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தகுதியுடைய 3.57 கோடி மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி, கோதுமை ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் கிடைக்கும் படி, இத்திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக, கடந்த இரு மாதங்களாக கூடுதல் அரிசியை தமிழ்நாடு 'சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு' கொடுத்துள்ளோம்.
அடுத்த ஐந்து மாதங்களுக்கு (ஜூலை முதல் நவம்பர் வரை) ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை முற்றிலும் இலவசமாக வழங்க இந்திய உணவு கழகம் தயாராகவுள்ளது.
அவற்றை எடுத்தும் செல்லும் பணியை மாநில அரசும் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டிற்கு சாதாரணமாகவே 3 லட்சம் டன் அரிசி, கோதுமை தேவைப்படுவதாகவும், அதற்கு கூடுதலாக 1.78 லட்சம் டன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரிக்கு இது வரை மூன்று கட்டங்களாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன (15 லட்சத்து 78 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 72 ஆயிரத்து 830 மெட்ரிக் டன் கோதுமை) .
இதற்காக இந்திய அரசு ரூ. 7,588 கோடியை செலவிட்டுள்ளது. அடுத்த ஐந்து மாதங்களில் 9 லட்சம் டன்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ. 3,325 கோடி ஆகும்.
வழக்கமாக வழங்கப்படும் உணவு தானிய வகைகளை விட, இது இருமடங்கு கூடுதலான அளவு என்பதால் இதன் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மாபெரும் சவாலாக விளங்குகிறது.
இத்தகைய சவாலை எதிர்கொண்டு ஊரடங்கு கால இக்கட்டான தருணங்களில் உணவு தானியங்களை மாநிலத்தின் அந்தந்தப் பகுதிகளில் கொண்டு சேர்ப்பதில் இந்திய உணவுக் கழகம் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு உள்ளது.
நடப்பாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமார் 36 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்குகளில் மாநில அரசு 17 லட்சத்து 6 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உணவு தானிய விளைச்சல் மிகச் சிறப்பாக இருப்பதால் வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதில் எந்தவித சிரமமும் இருக்காது.
இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 19 லட்சத்து 44 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் அரிசியும், 75 ஆயிரத்து 776 டன் கோதுமை பஞ்சாபில் இருந்தும் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக கூடுதலாக இந்த உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. கையிருப்பில் 30 லட்சம் டன் தானியங்கள் உள்ளன. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்த கூடுதல் தானியங்கள் உதவும்.
இச்செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை இயக்குநர் குருபாபு பலராமன் உடனிருந்தார்.
இதையும் படிக்கலாமே: 80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - மத்திய அரசு