டெல்லி: டிஜிட்டல் முறையிலான மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையை தங்க நிறம் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ண அட்டையில் வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில், நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துவருகிறார்.
முன்னதாக நிர்மலா சீதாராமன், மத்திய நிதித் துறை இணையமைச்சர்கள் பங்கஜ் சௌத்ரி, பகவத் காரத் ஆகியோருடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரபின்படி சந்தித்தார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித் துறை இணையமைச்சர்கள், துறையின் உயர் அலுவலர்கள் மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்வதற்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக மத்திய நிதித் துறை அமைச்சகம், இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை ஒவ்வொருவரையும் உள்ளடக்கியதாகவும், நன்மையளிப்பதை உறுதிசெய்யும் விதமாகவும் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது.
நிதித் துறை இணையமைச்சர் சௌத்ரி கூறுகையில், "நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை ஒவ்வொரு துறையின் தேவையுணர்ந்து உள்ளடக்கியதாக இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் நன்மையளிக்கும் வரவு செலவுத் திட்ட அறிக்கையாக இருக்கும். அனைத்துத் துறைகளும் (வேளாண்மை உள்பட) இன்றைய வரவு செலவுத் திட்ட அறிக்கையை எதிர்பார்த்துள்ளன" எனத் தெரிவித்தார்.
2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 9.2 விழுக்காடாகவும், ஏப்ரல் 1 முதல் 2023 நிதியாண்டில் 8 முதல் 8.5 விழுக்காடாகவும் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையை சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2022-23 முழுச் செய்தியையும் எளிய முறையில் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்