ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரை அடுத்த திண்டோரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, உடல் நலக்குறைவு ஏற்படவே, ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்து உள்ளது. குழந்தையை வீட்டிற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்ல, மருத்துவமனை நிர்வாகத்தை நாடியபோது, அவர்கள் கேட்ட பணத்தை, இவர்களால் கொடுக்க முடியாததால், குழந்தையின் சடலத்தை, ஒரு பையில் வைத்துக்கொண்டு சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டோரி கிராமத்தைச் சேர்ந்த ஜம்னா பாய்க்கு, பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவர், திண்டோரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் குழந்தையைப் பிரசவித்தார். குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்தது.
தந்தை வேண்டுகோள் : இறந்த குழந்தையின் சடலத்தை, திண்டோரி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்குக் கொண்டு செல்ல, வாகன வசதி செய்து தருமாறு, மருத்துவமனை நிர்வாகத்திடம், குழந்தையின் தந்தை, கோரிக்கை விடுத்தார். மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு உதவி செய்ய மறுத்து விட்டது. தனியார் ஆம்புலன்ஸ் சேவையை அணுகப் போதிய வசதி இல்லாததால், குழந்தையை, தாங்களே கொண்டு செல்ல முடிவு எடுத்தனர்.
இதையும் படிங்க: Pandian Express: பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 'நிழல் ரயில்' இயக்க கோரிக்கை!
ஆட்டோ ரிக்ஷா மூலம், ஜபல்பூர் பேருந்து நிலையத்தை அடைந்த அவர்கள், குழந்தையின் சடலத்தை, ஒரு பையில் வைத்து மறைத்து, திண்டோரி செல்லும் பேருந்தில் ஏறினர். நள்ளிரவு நேரத்தில், அவர்கள் திண்டோரி வந்து சேர்ந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல உறவினர்கள் யாரும் வராததால், அவர்கள் செய்வதறியாது தவித்து நின்ற நிகழ்வு, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் சடலத்தை, பையில் வைத்து, பேருந்தில் 150 கிலோ மீட்டர் தொலைவை அவர்கள் பயணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, உறவினர் சுரஜ்தியா பாயிடம், பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அவர்களுக்கு, வேறு வழி இல்லாததால், இவ்வாறு, செய்ய நேரிட்டதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார். இதேபோன்று, கடந்த மாதம், மேற்குவங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில், பிறந்த குழந்தையின் சடலத்துடன், 200 கிலோமீட்டர் பேருந்தில் பெற்றோர் பயணித்த சம்பவம், அரங்கேறி இருந்தது. இந்த விவகாரம் வெளியான நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய, துணை தலைமை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டு இருந்தது நினைவிருக்கலாம்.
இதையும் படிங்க: இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் செந்தில் பாலாஜி - தமிழ்நாடு அரசு