பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் போலீசார் பாதுகாப்பு வளையத்தில் இருந்த உமேஷ் பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் எண்கவுண்டர் செய்தனர். கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருந்து கொண்டே அத்திக் அகமது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பாலுக்கு, சிறையில் இருக்கும் அத்திக் அகமதுவால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உமேஷ் பாலுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மர்ம நபர்களால் உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலரும் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அத்திக் அகமதுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், உமேஷ் பால் படுகொலை சம்பவம் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், மாநிலத்தை ரவுடிகளை வளர்த்து விட்டது சமாஜ்வாதி கட்சி தான் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எதிர்கட்சித் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்தார்.
உமேஷ் பால் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட உத்தரபிரதேச போலீசார், முக்கிய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் இரண்டரை லட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும் உமேஷ் யாதவ் மற்றும் காவலர்கள் மீது முதன் முதலில் துபாக்கிச் சூடு நடத்திய விஜய் சவுத்திரி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் என தனியாக போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில் உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அர்பஸ் என்பவரை கடந்த மாத இறுதியில் போலீசார் என்கவுண்டர் செய்தனர். பிரயக்ராஜ் மாவட்டத்தின் துமாங்கஞ்ச் பகுதியில் வைத்து அர்பசை, போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில் வழக்கில் தொட்ர்புடைய முக்கிய குற்றவாளியையும் போலீசார் தற்போது என்கவுண்டர் செய்துள்ளனர்.
விஜய் சவுதிரி என்ற உஸ்மானை பிரயாக்ராஜ் மாவட்டத்தில் வைத்து என்கவுண்டர் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உஸ்மானை கைது செய்ய முயன்ற போது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதன் காரணமாகவே பதில் தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் கூறினர். உமேஷ் பால் கொலைச் சம்பவம் நடந்து 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களை போலீசார் அரங்கேற்றி இருப்பது ரவுடிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "எட்டு வயதில் தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்" - நடிகை குஷ்பூ பகீர்!