சென்னை: உக்ரைன் - ரஷ்யப்போரினால் அங்கு படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், பணியாளர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
போர் முடிவு பெறாமல் தொடர்ந்து 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்துக்கொண்டே இருப்பதால், அங்கே மருத்துவம் மற்றும் இதர படிப்புகளைப் பயின்று வந்த மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு, மாணவர்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத்தொடரப்பட்டது. அப்போது மத்திய சுகாதார அமைச்சகம் 'மாணவர்கள் இங்கே படிப்பைத் தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தது.
ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் மத்திய அரசு எதிர்மறையாக பதில் அளித்து இருப்பதும்; தேசிய மருத்துவ ஆணையம் உக்ரைனில் பயின்று வந்த மாணவர்கள் 29 நாடுகளில் தங்களது படிப்பைத் தொடரலாம் என அறிவித்ததும் மாணவர்களுக்குக் கவலையை அளித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள், அங்கு உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஒரு ஆண்டு காலம் வீண் ஆகி விட்ட நிலையில் மாணவர்கள் இங்கு உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும், வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டுமென்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: உக்ரைனில் படித்த மாணவர்கள் 29 நாடுகளில் மீண்டும் படிப்பைத் தொடரலாம்: தேசிய மருத்துவ ஆணையம்