டெல்லி : லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்தப்படும் எந்தவித நேரடி தாக்குதலும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்து உள்ளார்.
ஜூலை 8 ஆம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே பேரணி நடத்த உள்ளதாக காலிஸ்தான் அமைப்பினரின் "கில் இந்தியா" என்ற போஸ்டர் ட்விட்டரில் வேகமாக பரவியது. இதனால் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி மற்றும் பர்மிங்காமில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஷஷாங்க் விக்ரம் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ட்விட்டர் பதவி வேகமாக பரவிய நிலையில், கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்தப்படும் எந்த விதமான நேரடி தாக்குதல்களையும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவெர்லி தெரிவித்து உள்ளார். இந்திய தூதரகத்தில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி மற்றும் இந்திய அரசிடம் தெளிவுபடுத்தி உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.
இங்கிலாந்தை தொடர்ந்து கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வெளியே காலிஸ்தான் பேரணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய தூதரக அதிகாரிகளின் பெயர்களைக் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த கனடா பிரதமர் ஜஸ்டின், இந்திய அரசு தவறு செய்வதாகவும், கனடா எப்போதும் வன்முறை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை மிக தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் கூறினார். கனடா அரசு எப்போதும் தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக ஜஸ்டின் தெரிவித்தார்.
கடந்த வாரம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நட்பு நாடுகள் காலிஸ்தான் அமைப்பினர்க்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார். கனடாவில் காலிஸ்தானி அச்சுறுத்தல் சுவரொட்டிகளில் இந்திய தூதர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்ததை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தூதரகம் முன் ஒட்டப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் போஸ்டர்களில் இந்திய தூதரர்களின் புகைப்படங்கள் இருப்பது குறித்து கனடா அரசு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களை குறிவைக்கும் பாஜக... மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனை!