மங்களூர்: உலகம் முழுவதும் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது. புற்றுநோய் வந்தால் ஆயுட்காலம் குறைந்துவிடும், மருந்தே இல்லாத குணப்படுத்த முடியாத வியாதி என்று மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கிறது.
பெரும்பாலான நோயாளிகள் கீமோதெரபி சிகிச்சையின் போது தங்களின் தலைமுடியை இழக்க நேரிடுகிறது. அதனை சரி செய்ய அவர்களுக்காக ரத்த தானம், கண் தானம் போல தலைமுடி தானமும் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் புற்றுநோய் நோயாளிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மங்களூருவை சேர்ந்த தம்பதியினர் தங்கள் 2 வயது மகளின் தலைமுடியை தானம் செய்துள்ளனர்.
மரொலியைச் சேர்ந்த சுமலதா மற்றும் பாரத் குலால் தம்பதியின் 2 வயது மகள் ஆத்யா குலால் தனது தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க தானமாக வழங்கியுள்ளார். இந்த சம்பவம் புற்றுநோய் நோயாளிகளுக்கு தலைமுடியை தானம் செய்வதற்கு ஒரு சிறிய குழந்தையின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது. இந்த தகவலை மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வேதவியாச காமத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த குழந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. புற்று நோயால் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் தலைமுடி தேவைப்படுகிறது. இவ்வாறு தங்களின் தலை முடியை இழக்கும் நோயாளிகளுக்காக விக் தயாரிக்க தலைமுடி பெறப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கொஞ்சும் பறவையே! உன்னை கையிலேந்தவா? - பார்வையாளர்களை கவரும் பூங்கா