சண்டிகர்: பதன்கோட்டில் சிப்பாயாக நியமிக்கப்பட்ட 26 வயதான ராணுவ வீரர் மற்றும், ஃபசில்காவில் உள்ள மஹாலம் கிராமத்தைச் சேர்ந்த அவரது உதவியாளரான பம்மா என்ற பரம்ஜீத் சிங் ஆகியோரை போதைப்பொருள் கடத்தியதற்காக போலீசார் கைது செய்தனர். மேலும் உத்தரப்பிரதேச பதிவு எண் கொண்ட அவர்களது கார் மற்றும் இரண்டு மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) கவுரவ் யாதவ் கூறியதாவது, மத்திய ஏஜென்சிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் நன்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையில், எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து தலைமையிலான ஃபாசில்கா போலீசார் சதர் ஃபசில்கா பகுதியில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையிலிருந்த அவர்கள் காரை சோதனையிட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராணுவ ஐடி கார்டை காண்பித்துவிட்டு, போலீசார் காரைச் சோதனை செய்வதற்கு முன்பாக அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதனால் போலீசார் உடனடியாக அனைத்து சோதனைச் சாவடிகளையும் பலப்படுத்தி, காகன்கே-ஷம்சாபாத் சாலையில் அவர்களைப் பிடித்து, அவர்களது காரை சோதனை செய்ததில், அதில் 29 ஹெராயின் பாக்கெட்டுகள் இருந்தது. 31.02 கிலோ கிராம் எடையுடைய அந்த போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் என டிஜிபி தெரிவித்தார்.
ஃபெரோஸ்பூர் ரேஞ்ச் காவல்துறை துணை ஆய்வாளர் ஜெனரல் ரஞ்சித் சிங் தில்லான் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட கடத்தல்காரர்களிடமிருந்து போதைப்பொருளைப் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் போதைப்பொருள் பொட்டலங்களை ஒரு குழாய் உதவியுடன் எல்லை வேலி வழியாகப் பெற்றுள்ளனர். மேற்கொண்டு இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சிறுவன் கூறிய காரணம் என்ன?