கொச்சி: பெங்களூர் செல்வதற்காக அலையன்ஸ் ஏர் விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள், விமானம் அவசரக் கதவை திறக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏறபட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த ராமோஜி கோரயில் மற்றும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் நேற்றைய முன்தினம் (நவ.23), பெங்களூர் செல்வதற்காக அலையன்ஸ் ஏர் விமானத்தில் கர்நாடகா விமான நிலையத்தில் இருந்து பயனித்துள்ளனர். விமானம் கொச்சி விரிகுடா பகுதி வழியாக நகரும்போது, இருவரும் பலமுறை விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றுள்ளனர்.
இதனைப் பார்த்த விமான ஊழியர்கள் ,உடனடியாக கொச்சி விமான நிலைய ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரின் பேரில், நெடும்பசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், பயணிகள் இருவரையும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நெடும்பசேரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இருவரும் பெங்களூர் செல்லவிருந்த நிலையில், அவர்களை காவல் துறையினர் தடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தவறுதலாக கதவைத் திறக்க முயன்றதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் கதவை மூன்று, நான்கு முறை திறக்க முயற்சித்தனர் என விமான நிலைய அதிகாரிகள் காவல் துறையிடம் தெரிவித்ததால், இருவரின் கோரிக்கையை போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, இன்று (நவ.25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!