போபால் : மத்திய அமைச்சருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோ கால் பேசி பணம் பறிக்க முயன்ற கும்பலை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல். கடந்த ஜூன் மாதம் அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலிடம் வாட்ஸ் அப் ஆபாச வீடியோ கால் மூலம் மர்ம நபர்கள் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது தனிச் செயலாளர் கடந்த ஜூன் மாதம் இறுதியில் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை தொடர்பு கொண்ட மொபைல் நம்பர்களின் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மொபைல் நம்பர்கள் அசாம் மாநிலத்தில் இருப்பதாக போலீசாருக்கு சிக்னல் காட்டி உள்ளது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், அமைச்சரை தொடர்பு கொண்ட ஒரு செல்போன் சிம் 31 ஐஎம்ஐ நம்பர்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மற்றொரு செல்போன் நம்பர் 18 ஐஎம்ஐ களில் பயன்படுத்தப்பட்டதை கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து தொடர் விசாரணை நடத்திய அதிகாரிகள் எம்.டி. வாகீல் மற்றும் எம்.டி சாஹிப் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதேநேரம் பொது மக்களிடம் ஆபாச வீடியோ கால் பேசி பணம் பறிக்கும் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்படும் எம்.டி சபீர் தலைமறைவானதாகவும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அண்மையில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக எம்எல்ஏ, வீடியோ காலில் பெண்ணுடன் நிர்வாணமாக பேசுவது போல் சித்தரித்து வீடியோ அனுப்பி, சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி, 10 ஆயிரம் ரூபாய் பறித்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணக்குமாருக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வந்து உள்ளது. அந்த அழைப்பை அவர் எடுத்துப் பேசியபோது எதிரில் யாரும் இல்லாமல் சில விநாடிகளில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் எம் எம்.எல்.ஏ-வின் வாட்ஸ்அப்பிற்கு ஆபாச வீடியோவை அனுப்பி கும்பல் 10ஆயிரம் ரூபாய் பணம் பறித்தது.
இது தொடர்பாக தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில், எம்.எல்.ஏ சரணவண குமார் புகார் அளித்த நிலையில், ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க : பெரியகுளம் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த வழக்கு... ராஜஸ்தானில் ஒருவர் கைது!