இந்தூர்: மாஸ்க் அணியாமல் வந்த ஆட்டோ டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கிய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தூரில் ஆட்டோ டிரைவர் ஒருவரை காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், சாலையில் கிடக்கும் ஆட்டோ டிரைவரை காவலர் காலால் அழுத்தி பிடித்திருக்கிறார். இந்தக் காட்சி, ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த ஆட்டோ டிரைவர் பெயர் கிருஷ்ணா (35) என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் செல்லும் வழியில் மாஸ்க் தவறியதாக கிருஷ்ணா தெரிவிக்கிறார்.
மேலும் அவர், மாஸ்க் அணியாததற்காக என்னை காவல் நிலையத்துக்கு வரச் சொல்லி காவலர்கள் அழைத்தனர். நான் பின்னர் வருவதாக கூறினேன், ஆனால் அவர்கள் என்னை தாக்கத் தொடங்கிவிட்டனர். பின்பு என் தந்தைக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறினேன். அப்போதும் அவர்கள் என்னை தாக்குவதை நிறுத்தவில்லை. என் உறவினர்கள் வந்து தடுக்க முயற்சித்தார்கள், அவர்களையும் காவலர்கள் பொருட்படுத்தவில்லை என்றார்.
அதுமட்டுமல்லாது தன் மீது கடந்த காலங்களில் சில வழக்குகள் இருந்ததையும் கிருஷ்ணா ஒப்புக்கொண்டார். கிருஷ்ணாவை தாக்கியது காவலர்கள் கமல் பிரஜபத், தர்மேந்திர ஜேட் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், ஆட்டோ டிரைவர் மீது கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது குறித்து கேட்டதற்கு, ஆட்டோ டிரைவர் தாக்க முயன்றுள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், அந்தக் காட்சி வெட்டப்பட்டுள்ளது என காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.