கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், கேரளா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருகை தருகின்றனர். இதனையடுத்து, ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், பம்பையாற்றில் நீராடிய பின்னரே ஐயப்பன் கோயிலில் தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், ஆலப்புழா மாவட்டம் செங்கனூரில் பம்பையாற்றின் ஒரு பகுதியான பரக்காட்டில் குளித்த இரண்டு சபரிமலை பக்தர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் இன்று (டிச.27) மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பரக்காட்டில் உயிரிழந்தவர்கள் சென்னை தி.நகரைச் சேர்ந்த சந்தோஷ் (19), அவினாஷ் (21) என காவல்துறையின் விசாரணையில் வெளிவந்துள்ளது.
சபரிமலைக்குச் சென்றுவிட்டு செங்கனூர் வந்த குழுவினர், இரவு 7.30 மணிக்கு சென்னை நோக்கி வீட்டுக்கு புறப்பட இருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர் தேடுதலுக்குப் பின்னர், இரவு 7 மணியளவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு, உடற்கூராய்விற்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த சந்தோஷ் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கியதையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற அவினாஷும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து குருசாமி ரவி என்பவரின் தலைமையில் உயிரிழந்த சந்தோஷ் மற்றும் அவினாஷ் உள்பட 22 பேர் கடந்த டிச.24-ம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சகோதரியின் கணவரை தீ வைத்து கொலை செய்த வழக்கு; மைத்துனரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்!