டெல்லி மாசுபாடு குறித்து தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்கள் தான் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெரும் மாசுபாட்டை உருவாக்குகின்றன. அவர்களுக்கு பிரச்னை என்னவென்று புரியவில்லை.
தங்களுக்கென்று தனி நிகழ்ச்சி நிரல்களையும் விதிகளையும் அவர்கள் கொண்டுள்ளனர்'' என தலைமை நீதிபதி ரமணா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீதிபதி ரமணா, நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் டெல்லி மாசுபாடு தொடர்பான வழக்கு இன்று (நவ.17) விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'பிரமாணப் பத்திரத்தில் 35-40 விழுக்காடு மாசுபாடுக்கு குப்பை எரிப்பே காரணம் என்று கூறப்பட்டுள்ளதைத் தவிர்த்து, குப்பைகளை எரிப்பதால் 4-10 விழுக்காடு மட்டுமே மாசு ஏற்படுகிறது என்று நான் கூறியதாக மேற்கோள் காட்டி ஊடகங்களில் மோசமான விவாதங்கள் நடந்துள்ளன' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி "வைக்கோல் எரிப்பு பருவமான இந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்பது வெளிப்படையானது. அரசுப் பதவிகளில் இருக்கும்போது இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்வது இயல்பு. நாங்கள் மனசாட்சிபடி நடப்பவர்கள். முன்னேற்றத்துக்காகவே நாங்கள் உழைக்கிறோம்," என்றார்.
இந்நிலையில், வைக்கோல் எரிப்பு விழுக்காடு குறித்த இந்த சர்ச்சை பொருத்தமற்றது என்றும், முக்கியப் பிரச்னையான மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தாங்கள் கவனம் செலுத்துவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீர்க்கமாகத் தீர்ப்பளித்த சஞ்ஜிப் பானர்ஜி