மும்பை: மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில், இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா(21) கடந்த 24ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 'அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்' என்ற சீரியலில், தனது முன்னாள் காதலன் ஷீசன் முகமது கானுடன் துனிஷா சர்மா நடித்து வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மகளை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் முகமது கான் மீது துனிஷா சர்மாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி நடிகர் ஷீசனை போலீசார் கைது செய்தனர். ஷீசனை பிரிந்ததன் காரணமாகவே துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இவர்களது பிரிவுக்கு டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே துனிஷா - ஷீசனின் வாட்ஸ்அப் உரையாடல்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஷீசனுடன் பழகிவந்த மற்றொரு பெண் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தப் பெண்ணுடனான உரையாடல்களை ஷீசன் நீக்கியுள்ளதால், அந்தப் பெண் யாரென்று கண்டறிந்து அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் ஷீசனின் நான்கு நாட்கள் போலீஸ் காவல் இன்றுடன்(டிச.28) முடிவடைந்ததையடுத்து, அவர் தானே மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஷீசன் கானின் காவலை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:Tunisha Sharma: காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு.. துனிஷா மரணத்தின் முழு பின்னணி?