பரேலி(உத்தரப்பிரதேசம்): திப்ருகரில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி சந்திப்பில் நின்றது. அங்கிருந்து ரயில் புறப்பட்டபோது, ராணுவ வீரர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறியுள்ளார். இதைப் பார்த்த ரயில் டிக்கெட் பரிசோதகர், ராணுவ வீரருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், டிக்கெட் பரிசோதகர் ராணுவ வீரரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. ராணுவ வீரர் தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். இதில் வீரரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன. ராணுவ வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த சக ராணு வீரர்கள், டிக்கெட் பரிசோதகரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் டிக்கெட் பரிசோதகரை தாக்கினர். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் நீண்ட நேரம் அங்கேயே நின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராணுவ வீரர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ரயிலை அனுப்பி வைத்தனர். சம்மந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மட்டன் சூப்பில் சோறு - ஹோட்டல் ஊழியரை கொலை செய்த இளைஞர்கள்