ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு, பிற மாநிலங்களில் இருந்து, ஆண்டுக்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதாக தெரிகிறது. அதாவது பிற மாநிலத்திலிருந்து ஹைதராபாத்திற்கு குடிபெயர்பவர்கள், பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை எடுத்து வந்து பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் தெலங்கானா மாநில அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
அதன்படி வெளிமாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு தெலங்கானா மாநில பதிவு எண் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்ஓசி (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) பெற்றிருந்தாலும், தெலங்கானாவுக்கு வந்த உடனேயே, தெலங்கானா மாநில பதிவு எண்ணுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பிற மாநிலத்தில் சாலை வரி செலுத்தியிருந்தாலும், தெலங்கானாவிலும் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவரியின் அடிப்படையில் அங்குள்ள போக்குவரத்துத் துறை மண்டல அலுவலகங்களுக்குச் சென்று பதிவு எண்ணை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரியில் காலி பாக்ஸ்களுடன் பால் முகவர்கள் போராட்டம்!