வாஷிங்டன் : 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் சட்ட விரோத நடவடிக்கையில் தான் ஈடுபடவில்லை என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் டிரம்ப். பல்வேறு பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர். பலர் வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிட்டனர். அதில் ஒருவர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில், அவர் தன்னுடன் சில நாட்கள் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்டார்மி டேனியால்ஸ் கருத்து வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரம் அதிபர் தேர்தலில் எதிரொலித்ததை அடுத்து, இது தொடர்பாக ஸ்டார்மி டேனியல்ஸ் மேற்கொண்டு பேசாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் அவருக்கு வழங்கபட்டதாக கூறப்பட்டது. ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு வழங்கப்பட்ட பணம், தேர்தல் நிதியில் இருந்து வழங்கப்பட்டதாகவும், அதை தேர்தல் செலவு என பொய்யாக கணக்கிடப்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் தன் தேர்தல் செலவில் திருத்தங்கள் செய்து வணிக பதிவை மாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அமெரிக்காவில் வணிக பதிவுகளில் மோசடி செய்வது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. தான் கைது செய்யப்பட உள்ளதாக டிரம்பும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் டிரம்ப் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் வந்த டிரம்ப், நியூயார்க் நகரில் உள்ள தனது டிரம்ப் ஹவுசில் தங்கினார். அவரது வீட்டின் முன் காத்திருந்த தனது ஆதரவாளர்களை பார்த்து டிரம்ப் கையசைத்தார். தொடர்ந்து தன் டிரம்ப் ஹவுசில் இருந்து புறப்பட்ட அவர் மான்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு சென்றார்.
மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப்பை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. அவரது கைரேகை பதிவுகளை போலீசார் பெற்றுக் கொண்டனர். இருப்பினும், கைவிலங்கு ஏதும் டிரம்ப்புக்கு அணிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.
டிரம்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுப்பதாக டிரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றும் தான், எந்தவிதமான சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை எனக் கூறினார். தன் மீது போடப்பட்ட வழக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், சட்டவிரோதமாக ஏதுவம் நடக்கவில்லை எனக் கூறினார்.
இதையும் படிங்க : ஆபாச நடிகை பண விவகாரம் : கைதானாரா டிரம்ப்?