ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா, ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அனைத்து மாநில/ யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் பேசியபோது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உலகளாவிய சுகாதார காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) அரசின் திட்டத்தை இணைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இதுவரை எதிர்த்துவந்த டி.ஆர்.எஸ் அரசின் இந்த திடீர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், “கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்தாமல் புறக்கணித்துவந்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களிடமும், மத்திய அரசிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஐந்து லட்சம் சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்குகின்ற ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் இறந்தனர்" என கூறினார்.
இதையும் படிங்க : புத்துணர்வுடன் புத்தாண்டை வரவேற்போம் - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு