தமிழ் நாடக வரலாற்றுக்குப் புத்துயிர் தந்த சங்கரதாசு சுவாமிகள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தலைமையர்களாக விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான்.
தமிழ் நாடக தலைமையாசிரியரான இவரை நாடக தந்தை என்று கலைஞர்களால் அழைக்கப்படுபவர். இவரது 98ஆவது நினைவு தினம், கருவடிக்குப்பத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (நவம்பர் 13) அனுசரிக்கப்பட்டது. நாடக கலைஞர்கள் ஏராளமானோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நாடகம் மற்றும் கூத்து கலைஞர்கள், பல்வேறு இசை வாத்தியங்களுடன் ஆடி பாடி ஊர்வலமாக வந்து சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.