அல்லூரி சீதாராம ராஜு (ஆந்திரா): அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் ஆந்திரா-ஒடிசா எல்லையில் உள்ள சித்ரகொண்டா காவல் நிலையத்தை ஏழு கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர் இன்று (ஜூன் 21) முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா-ஒடிசா எல்லையில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில் பழங்குடியின கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு நீண்ட காலமாகவே எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஏழு பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் குருபிரியா என்ற பாலம் கட்டப்பட்டதற்குப் பிறகு எந்தவிதமான வளர்ச்சி நடவடிக்கையும் இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தநிலையில், சித்ரகொண்டா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கி , அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
தகவலறிந்து அங்கு வந்த அப்பகுதி எம்எல்ஏ போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் தாக்குதலின் பின்னணியில் வேறு காரணம் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக பழங்குடியின கிராமங்களில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும், கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 70 வயது மருத்துவரிடம் ரூ.1.80 கோடி மோசடி - விசாரணையில் திடுக்கிடும் தகவல்