மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27ஆம் தேதி தண்டனைக் காலம் முடிந்து வெளியே வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று(ஜன.20) அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவரது உடல்நிலையைப் பரிசோதித்த சிறை மருத்துவர், அவருக்கு காய்ச்சல், சளி காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்து சசிகலா பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 63 வயதான சசிகலாவுக்கு உயர் தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, சசிகலாவுக்கு ரேபிட் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று இல்லை என தெரியவந்தது. மருத்துவமனையில் சசிகலாவுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என, அவரது உறவினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7.86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; கோ-வின் செயலியில் புது வசதி!