நியூ டெல்லி: டெல்லி கிரீன் பார்க் பகுதியில் உள்ள உப்பார் சினிமா தியேட்டரில் 1997ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 59 பேர் இறந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த விபத்தின் போது ‘பார்டர்’ என்கிற இந்தி திரைப்படம் அந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த விபத்தில் தங்களது இரு குழந்தைகளை இழந்த சேகர் மற்றும் நீலம் கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் நீதி கிடைப்பதற்கு தாங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ‘டிரெயல் பை ஃபயர்’ என்ற புத்தகம் எழுத முடிவு செய்தனர்.
சேகர் மற்றும் நீலம் கிருஷ்ணமூர்த்தி தம்பதியின் 17 வயது மகள் உன்னதி மற்றும் 13 வயது மகன் உஜ்வால் உட்பட 59 பேர் உபார் விபத்தில் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், தியேட்டரின் டிரான்ஸ்பார்மர் அறையில் திடீரென தீப்பிடித்து, மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது தெரியவந்தது. அப்போது திரையரங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
‘டிரெயல் பை ஃபயர்’ புத்தகம் 2016ஆம் ஆண்டில் பென்குயின் பப்ளிகேஷன் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இந்த புத்தகத்தை இணையத்தொடராக மாற்றி பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்து ஜனவரி 13ஆம் தேதி வெளியிட்டது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த நீலம் கிருஷ்ணமூர்த்தி, 'எங்கள் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரது கஷ்டங்களையும் பிரதிபலிக்கும் விதமாக இந்த ‘டிரெயல் பை ஃபயர்’ எழுதப்பட்டது. முதலில் சித்தார்த் ஜெயின் இந்த விபத்து குறித்து புத்தகத்தைச் சார்ந்து திரைப்படம் எடுக்க எங்களை அணுகிய போது முதலில் மறுப்புத் தெரிவித்தோம்.
பின் எனது கணவர் என்னை சமாதானப்படுத்தி, "இந்தச் சம்பவம் மிகவும் தீவிரமான, உணர்ச்சிகரமான பிரச்னை. இதை மனதில் வைத்து ஒரு திரைப்படம் எடுக்க அனுமதிக்கலாம். ஆனால், உணர்ச்சிமிகு நாடகத்தன்மையை விரும்பவில்லை என திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனையை வைக்கலாம்’’ எனக் கூறினார். இதற்கு படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர், புத்தகத்தை திரைப்படத்திற்கு பதிலாக வெப் சீரிஸாக எடுக்க முடிவு செய்தனர்.
பல ஆண்டுகளாக தானும் தனது கணவரும் எதிர்கொண்ட சட்டப் போராட்டம் குறித்து பேசிய நீலம், நீதிமன்றத்தில் இதுபோன்ற சோதனைகளை சந்திக்க நேரிடும் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பணக்காரர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களுக்கு எதிராக நிற்பது மிகவும் கடினம். மேலும் எங்களுக்கு பல மிரட்டல்கள் வந்தன. ஆனால், நாங்கள் பின்வாங்கவில்லை. நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், 30 வழக்கறிஞர்களுடன் சேர்ந்து எங்களை அச்சுறுத்தினார். ஆனால், எங்கள் குழந்தைகளை இழந்த பிறகு, எங்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. நாங்கள் அவர்களை எதிர்த்து வலுவாக நின்றோம்’’ என்று கூறினார்.
நெட்பிளிக்ஸ் தயாரித்த வெப் சீரிஸ் குறித்து நீலம் கூறியது, "இத்தொடரில் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்’’ என்றார்.
இந்நிலையில் ஜூலை 22, 1997அன்று மும்பையில் இருந்து சினிமா தியேட்டர் உரிமையாளர் சுஷில் அன்சல் மற்றும் அவரது மகன் பிரணவ் அன்சல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின் இந்த வழக்கின் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு சுஷில் உட்பட 16 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சுஷில் மற்றும் கோபால் உட்பட 12 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு