டெல்லி: இந்திய ராணுவத்துறையின் புலனாய்வுக்குழுவினர் மேகாலயா-அஸ்ஸாம்-வங்கதேச எல்லைப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைப் பிடிக்க தீவிர திட்டமிடல்களில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் அஸ்ஸாமில் இயங்கி வந்த தடைசெய்யப்பட்ட உல்ஃபா(( United Liberation Front of Asom (Independent)) அமைப்பின் முக்கியத் தலைவரான எஸ்.எஸ். திருஷ்டி ராஜ்கோவா மற்றும் அவரது கூட்டாளிகளான எஸ்.எஸ். கோரல் வேதாந்தா, யாசின் அசோம், ராப்ஜோதி அசோம் ஆகியோர் தங்களது பயங்கர ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ராஜ்கோவாவை ராணுவத்துறையின் புலனாய்வுக்குழுவினர் கைது செய்து, விரைவில் அஸ்ஸாம் அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ராணுவத்துறையின் புலனாய்வுக்குழுவினரின் 9 மாத இடைவிடாத உழைப்பின்காரணமாக, பயங்கரவாதிகள் தற்போது சரணடைந்துள்ளனர்.
அண்டைநாடான வங்கதேசத்தில் பதுங்கியிருந்த உல்ஃபா அமைப்பின் முக்கியத்தலைவரான பரேஷ் பாருவாவின் நம்பிக்கைக்குரிய ராஜ்கோவா, உடல் நலப்பிரச்னைகளுக்கு தீவிர சிகிச்சை எடுப்பதற்காக மேகாலயா மாநிலத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட உல்ஃபா அமைப்பானது, அஸ்ஸாம் மாநிலத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திபோராடி வருகிறது.
நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த திருஷ்டி ராஜ்கோவா சரணடைந்திருப்பது, பயங்ரவாத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை!