டூல்கிட் என்பது குறிப்பிட்ட விவகாரத்தின் முழுமையான தகவல்கள் அடங்கிய இணைய ஆவணமாகும். குறிப்பிட்ட விவகாரம் குறித்த தகவல்களை கோப்பாக தயாரித்து மக்களின் ஆதரவை கோருவதுடன் அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் அளிக்கிறது. ஒருவர் தயாரிக்கும் டூல்கிட்டை மற்றவர் தனக்கு தெரிந்த தகவல்களுடன் மாற்றி அமைக்கவும் இது வழி செய்கிறது.
வேளாண் திருத்த சட்டம் குறித்த டூல்கிட்டை பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்திருந்தார். தற்போது, இது தொடர்பான வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 21 வயதே ஆன சுற்றுச்சூழல் ஆர்வலரை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது.
’பிரைடே ஃபார் பியூச்சர்’ என்ற இயக்கத்தின் நிறுவனரான திஷா ரவி என்பவர், கிரிட்டா பகிர்ந்த டூல்கிட்டை புதிய தகவல்களுடன் மாற்றியமைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்கிடையே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட டூல்கிட்டை காலிஸ்தான் ஆதரவு அமைப்பு தயாரித்ததாக டெல்லி காவல் துறை தெரிவித்திருந்தது. புகழ்பெற்ற மவுண்ட் கார்மெல் கல்லூரியின் மாணவர் திஷா என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட டூல்கிட் பகிரப்பட்டிருந்ததாக டெல்லி காவல் துறை தெரிவித்திருந்தது.