சண்டிகர் : பஞ்சாப் மாநில அரசு 1-10ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கட்டாயம் என அறிவித்துள்ளதுடன் மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இது குறித்து மாநிலத்தின் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி ட்விட்டரில், “பஞ்சாப்பில் தாய்மொழியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படுகிறது.
இதை மீறும் பள்ளிகள் மீது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு பஞ்சாப்பில் உள்ள அலுவலகங்களுக்கும் பொருந்தும். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பெயர் பலகைகள் பஞ்சாபி மொழியில் இடம் பெற்றிருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங், முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்டவுடன் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் பாஜக அல்லது சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, கடந்த கால சிரோமணி அகாலிதளம், பாஜக கூட்டணி அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், “பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் தனது அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராஜினாமா முடிவு வாபஸ் - மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவராகிறார் நவ்ஜோத் சிங் சித்து