கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள மார்கிராமில் நேற்றிரவு (பிப்.4) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நியூட்டன் ஷேக் என்பவர் உயிரிழந்தார். அதே கட்சியை சேர்ந்த மற்றொருவரான லால்து ஷேக் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த குண்டு வெடிப்புக்கு காங்கிரஸ் காட்சியினரே முக்கிய காரணம் என்று நியூட்டன் ஷேக்கின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மார்கிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருப்பதும், நியூட்டன் ஷேக், லால்து ஷேக் இருவரையும் குறி வைத்தே கையெறி குண்டு வீசப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுஜாவுதீன் என்பவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் லால்து ஷேக்கின் சகோதரர் சவுத்ரி கூறுகையில், இந்த குண்டு வெடிப்புக்கு பின்னால் மிகப் பெரிய சதி இருக்கிறது. இந்த சம்பவம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளான அரசியல் போட்டியால் நடந்திருப்பதாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அப்படி எந்தவிதமான போட்டியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் கிடையாது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து சக பயணி தள்ளிவிட்டதில் இளைஞர் உயிரிழப்பு