பெர்காம்பூர்: மேற்குவங்க மாநிலத்தில் தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சுப்ரதா சாஹா-வுக்கு(72) அண்மையில் கொல்கத்தாவில் பித்தப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று(டிச.28) காலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சுப்ரதா சாஹாவுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலையில் அவர் உயிரிழந்தார். மூளை பக்கவாதம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சரான சுப்ரதா சாஹா மறைவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். சுப்ரதா மக்கள் சேவையில் காண்பித்த அர்ப்பணிப்பை மறக்க முடியாது என்றும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
சுப்ரதா சாஹா, முர்ஷிதாபாத் மற்றும் சாகர்திகி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை அமைச்சராக இவர் பதவி வகித்தார்.
இதையும் படிங்க: பனிமூட்டத்தால் குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 50 பேர் காயம்!