போபால் : மத்திய பிரதேசத்தில் இளைஞரின் கழுத்தில் பெல்ட்டால் கட்டி, நாயை போல் குரைக்குமாறும், மன்னிப்பு கோருமாறும் மூன்று இளைஞர்கள் துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞரின் கழுத்தில் பெல்ட் போன்று கட்டப்பட்டு உள்ள நிலையில், அவரை மூன்று இளைஞர்கள் மிரட்டுவது போல் அந்த வீடியோவில் உள்ளது. மேலும் அந்த இளைஞரை, நாயை போன்று குரைக்குமாறும், மன்னிப்பு கோருமாறும் மூன்று பேர் மிரட்டுவது போன்று அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த வீடியோவை கண்ட மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, வீடியோ குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வீடியோவில் துன்புறுத்தலுக்கு ஆளான இளைஞர் உள்பட நான்கு பேரையும் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். துன்புறுத்துதலுக்கு ஆளான நபர் விஜய் என்றும், அவர் துன்புறுத்தியது சமீர், சஜித், பைசன் ஆகியோர் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வீடியோ வைரலான நிலையில், விஜய் தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக போலீசார் கூறினர். மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
முன்னதாக இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பஜரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூன்று இளைஞர்களின் வீடுகள் போலீசார் முன்னிலையில் உடைக்கப்பட்டது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான 24 மணி நேரத்திற்குள், அந்த வீடியோவில் இருந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் சிக்கல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கவுதம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் அளித்த புகாரில் தில ஜமால்புரா காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கவுதம் நகர் போலீசாரிடம் வழக்கு குறித்த தகவல்கல் பகிரப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.
மேலும், நீதிமன்றத்தில் மூன்று இளைஞர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு புது மைல்கல் - மத்திய வெளியுறவுத் துறை!