டெல்லி யூனியன் பிரதேசத்தை அடுத்துள்ள கீர்த்தி நகரைச் சேர்ந்தவர் டோனி மெஹ்டோ (50). அவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து நடத்தி வந்தார். அங்கு பிளாஸ்டிக் பொருள்கள், பழைய இரும்புகள், வயர்கள், டி.வி., குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்த கடையின் ஒரு பகுதியில் நேற்றிரவு (ஜன.14) திடீரென எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் அங்கு இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் இரு இளைஞர்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்பட்ட இடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கடையில் வேலை செய்துவருபவர்கள், அங்கேயே வசித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கீர்த்தி நகர் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தீ விபத்து குறித்து ஊடங்களிடையே பேசிய டெல்லி காவல் துறை துணை ஆணையர் (மேற்கு) தீபக் புரோஹித், “ தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்துக்கு உயர் மின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகுதான் உரிய காரணம் தெரியவரும். கீர்த்தி நகர் காவல் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள அக்கடையின் உரிமையாளர் டோனி மெஹ்டோவை தீவிரமாக தேடி வருகின்றோம்” என்றார்.
இதையும் படிங்க : லவ் ஜிஹாத் விவகாரம்: ஜாகிர் நாயக் தொடர்பை விசாரிக்க வங்கதேசம் விரைந்த என்.ஐ.ஏ.