டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நேற்று (ஆகஸ்ட் 20) எதிர்க்கட்சிகளின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் திமுக, விசிக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கலந்துகொண்டன. கூட்டத்திற்குப் பிறகு, 19 கட்சித் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், 11 அம்ச கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு, அக்கோரிக்கைகளை வலியுறுத்திவரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நாடு தழுவிய அளவில் தர்ணா, ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோல்வியுறச் செய்ய இக்கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியுள்ளது.
ப.சிதம்பரம் ட்வீட்
"மற்ற எல்லா உரிமைகளுக்கும் மேலாக சுதந்திரத்தை விரும்புபவர்கள், 19 அரசியல் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக இணைந்துள்ளதை வரவேற்க வேண்டும்" என ப.சிதம்பரம் இந்தக் கூட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
மேலும், சிநேகிதர்கள் நம்மை கேலி செய்வார்கள். ஆனால், சிநேகிதர்கள் உள்பட அனைவரின் விடுதலைக்காகவும் நாங்கள் போராடுகிறோம் என்பதை அவர்கள் ஒருநாள் உணர்வார்கள்" எனவும் அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தில் திமுக பங்கெடுக்கும் - ஸ்டாலின்