மும்பை: மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், “மகாவிகாஸ் அகாதி கூட்டணி நவம்பர் 26ஆம் தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் அவர்களது சகாக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தோல்விக்கான ஆண்டு
ஆனாலும் இந்த அரசு கடந்த ஓராண்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள், பட்டியலின மக்கள் (தலித்), பழங்குடியின மக்கள், சாமானியர்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே இந்த ஆண்டை, “தோல்வி” என அழைக்க வேண்டும்” என்றார்.
ராம்தாஸ் அத்வாலே தனது பேட்டியின்போது மேலும் கூறியதாவது:-
பாஜக, சிவசேனா போட்டி
அந்த நேரத்தில் சிவசேனா கொள்கை முரண்பாடுகள் கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆட்சி முடிவுக்கு வரும்போது கூட்டணியும் முடிவுக்கு வரும்.
பால் தாக்கரே இருந்திருந்தால்....
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இக்கூட்டணி மூலம் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்நேரம் பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால் காட்சிகள் மாறியிருக்கும், இக்கூட்டணியும் நடந்திருக்காது.
விவசாயிகள் பிரச்னை
இந்த ஒரு ஆண்டில், விவசாயிகளுக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க அல்லது உறுதியளிக்கும் முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை. கரோனா பரவலை கூட சரியாக கையாளவில்லை.
மாநிலத்தில் ஒரு புறம் வறட்சி மறுபுறம் மழையால் பாதிப்பு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படவில்லை. சிவசேனா விவசாயிகளுக்கு எதுவும் செய்யாது. ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசிலும் சிவசேனா முக்கிய பொறுப்புகளை வகித்தது. தற்போது உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார். விவசாயிகள் வெறுங்கையுடன் உள்ளனர்.
பழங்குடி, பட்டியலினம் புறக்கணிப்பு
இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்பு, விவசாயிகளுக்கு எந்தவொரு நீதியும் வழங்கப்படவில்லை. மேலும் பட்டியலின மக்கள், ஆதிவாசிகள் (பழங்குடியினர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு நீதி வழங்க எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்தங்கிய வகுப்பினரின் பதவி உயர்வு குறித்து இடஒதுக்கீட்டில் முடிவெடுக்கப்படவில்லை. இவர்களுக்கு நீதி வழங்க இந்த அரசாங்கம் நினைக்கவில்லை.
கர்மா அரசை வீழ்த்தும்
இந்த அரசாங்கத்தை கவிழ்க்க நரேந்திர மோடியோ, தேவேந்திர ஃபட்னாவிஸோ தேவையில்லை. மேலும் இந்த அரசாங்கத்தை நாங்கள் கவிழ்க்க நினைக்கவில்லை, அதற்கான எந்தவொரு அவசியமும் இல்லை. அவர்களின் கர்மா ஒருநாள் திரும்பும்.
அன்று இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்து தானாகவே கவிழும். அப்போது நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைப்போம்.
மகாவிகாஸ் அகாதி அரசுக்கு 10க்கு 3 மதிப்பெண்கள்
இந்த ஒரு வருடத்தில் மகாவிகாஸ் அகாதி அரசு எதுவும் செய்யவில்லை. கரோனா பரவல், வறட்சி, கனமழை ஆகியவற்றை சமாளிக்க அரசாங்கம் தவறிவிட்டது.
ஆகையால் ஆண்டு முழுவதும் இந்த அரசாங்கத்தின் பணிகளை மதிப்பிடுகையில் 10க்கு 3 மதிப்பெண் வழங்குகிறேன்.
இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தனது பேட்டியின் போது கூறினார்.
முன்னதாக மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாதி கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி அமைத்தபோது, இந்த அரசாங்கம் இரு மாதத்தில் கவிழும் என்று பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'கரோனா கோ, கரோனா கோ...' முழக்கமிட்ட மத்திய அமைச்சருக்கு கரோனா உறுதி!