காரைக்கால்: Thirunallar: காரைக்கால் அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.
இந்த நிலையில் வரும் பக்தர்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு, பரிகாரமாக செய்வதற்கு விற்கப்படும் உணவுகள் கெட்டுப்போகியுள்ளதாக உணவுப்பாதுகாப்புத்துறை அலுவர்களுக்குப் புகார் வந்தது.
இதனையடுத்து அலுவலர்கள் நளன்குளத்தைச் சுற்றி உணவு விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது நளன் குளத்தைச் சுற்றி உள்ள தெரு ஓரத்தில் விற்கப்படும் பரிகார உணவுப்பொருட்கள் கெட்டுப்போனது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கெட்டுப்போன பரிகார உணவுப்பொருட்களை உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பக்தர்கள் - யாசகர்கள் - வியாபாரிகள் - மீண்டும் பக்தர்கள்: சுழற்சிமுறையில் சப்ளையாகும் உணவு
மேலும் நளன் குளம் அருகில் விற்கப்படும் பரிகாரப்பொருட்கள் அருகில் இருக்கும் யாசகம் எடுப்பவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், பக்தர்கள் அவ்வாறு தானமாக தரும் இந்தப் பரிகார உணவுப் பொருட்களை மீண்டும் யாசகம் பெறுபவர்கள், மீண்டும் வியாபாரிகளிடம் கொடுப்பதாகவும், பின் அது விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சோதனையில் அம்பலமாகி உள்ளது.
அதைத்தொடர்ந்து பிச்சை எடுப்பவர்களிடம் இருந்து வீணாகப்போயிருக்கும் அனைத்து உணவு பொருட்களையும் அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கெட்டுப்போன உணவுப்பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடைக்காரர்களே உண்ணமறுத்த உணவுப் பொட்டலங்கள்
உணவுப் பொட்டலங்களை பரிசோதித்த உணவுத்துறை அலுவலர்கள் அதிகமாக கெட்டுப்போனதால் அதனை கடைக்காரர்களேயே உண்ணுமாறு கூறினர். அவர்கள் தயாரித்த உணவை அவர்களே உண்ண மறுத்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்யும் சனி பகவான் கோயில் குளக்கரையில் கெட்டுப்போன பரிகார உணவு விற்பனை செய்த சம்பவம் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Karnataka Night curfew:அதிகரிக்கும் ஒமைக்ரான் - கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்