டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் (ஜனவரி 31) ஆம் தேதி தொடங்கியது. மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையை (மத்திய பட்ஜெட் 2022-23) நிதியமைச்சர் சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்செய்தார். இது இரண்டாவது தாளில்லா வரவு செலவுத் திட்ட (டிஜிட்டல் பட்ஜெட்) அறிக்கையாகும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (பிப்ரவரி 7) மக்களவையில் உரையாற்றினார்.
அப்போது, ராகுலின் பேச்சுக்குப் பதிலடி தரும்விதமாக நரேந்திர மோடி பேசுகையில், "தமிழ்நாடு குறித்தும் தமிழ் மொழி குறித்தும் மக்களவையில் பேசுகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி குளிர்காயப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களால் ஒருபோதும் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க முடியாது" என்றார்.
100 நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டும்
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 8) வரவு செலவுத் திட்ட அறிக்கை குறித்து பேசிய திருமாவளவன், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் 'UPA - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு' உருவாக்கியது என்பதால் தற்போதைய அரசு இத்திட்டத்தைக் கைவிடத் திட்டமிடுகிறதா?
இந்தச் சட்டத்தின்படி 100 நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியின் அடிப்படையில் 20 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும்.
தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி
மேலும், தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியின்படி 30 நாள்கள் மட்டுமே வேலை வழங்க இயலும். எனவே, தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி வழங்கும் திட்டம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.
திருமாவளவனின் கேள்விக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பதில் அளித்தார்.
100 நாள்கள் வேலைத் திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (MNREGA) என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச்சட்டம் 2005 மே 25 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இது 2009இல் காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். இத்திட்டத்தின்கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாள்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது, முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்குப் பின்னர், நபரை பதிவுசெய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார்.
பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்றிருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாள்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது.
இதையும் படிங்க: நாட்டின் 10% மக்களிடம் 57% வருமானம் உள்ளது - மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்