புதுச்சேரி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற சனநாயகம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம், திமுக சார்பில் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின்போது மேடையில் பேசிய திருமாவளவன், சனாதன இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி கிடையாது என்றார்.
மேலும் அவர், "சகோதரத்துவம் இருந்தால்தான் சமத்துவம் வரும், சுதந்திரம் இருந்தால்தான் சகோதரத்துவம் இருக்கும். நீதி கிடைத்தால்தான் இந்த மூன்றும் கிடைக்கும். இவை மூன்றுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.
சனாதனத்தை இடிக்க அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் போதும்!
ஆகவே சனாதனத்தை இடிப்பதற்கு இவர்கள்போல பாபர் மசூதியை இடிக்கப் போனதுபோல் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் ஒன்று போதும்" என்று பேசினார்.
தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் அவர், "ஆண்டாண்டு காலமாக உழைக்கின்ற மக்களை ஏய்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பகுத்தறிவு மூலமாகச் சிந்திக்கக் கூடாது என்கிற வகையிலே புராண குப்பைகளை இவர்களது மூளையில் திரித்தார்கள்.
இந்தியச் சமூகக் கட்டமைப்பை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கு இரண்டு புராணக் குப்பைகள், இதிகாசங்கள் என்ற பெயரால் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. அதில் ஒன்று ராமாயணம்; இன்னொன்று மகாபாரதம்" என்றார்.
இதையும் படிங்க:பட்ஜெட் கூட்டத்தொடர்: ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி குறித்து கலாநிதி வீராசாமி பேச்சு