சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் 87 கர்ப்பிணிகள் உயிரிழந்திருப்பதாகவும், அதில் ஒருவர் மைனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தவறியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் மாநிலத்தில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தில் அமிர்தசரஸ் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு மட்டும் இதுவரை அதிகபட்சமாக 16 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக டார்ன் தரன் மாவட்டத்தில் 10 கர்ப்பிணிகளும், ஃபெரோஸ்பூர் மற்றும் குர்தாஸ்பூர் மாவட்டங்களில் ஏழு கர்ப்பிணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நான்கு பகுதிகளும் எல்லையோர மாவட்டங்களாக இருப்பதால் அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையின் பணி கேள்விக்குறியாக உள்ளது என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த புள்ளி விவரங்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆளாக்கியுள்ளது.
மேலும், இதில் சில இறப்புகள் தனியார் மருத்துவமனைகளிலும், சில அரசு மருத்துவமனைகளிலும் நிகழ்ந்துள்ளன. அமிர்தசரஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மகளிர் மருத்துவப் பிரிவில் 16 பெண்கள் உயிரிழந்த நிலையில், அதில் எட்டு பெண்கள் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்திருக்கிறார்கள். மேலும், எட்டு பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளனர்.
டார்ன் தரனில் 10 பெண்கள் உயிரிழந்த நிலையில் அதில் எட்டு பேர் அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். பெரோஸ்பூர் மாவட்டத்தில் இறந்த கர்ப்பிணி, தனது வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்து அதன் பிறகு உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு பெண்கள் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெண் லூதியானா பகுதியிலுள்ள டிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த பெண்களின் மரணத்திற்கான காரணத்தை அந்தந்த மருத்துவமனைகள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில், முதற்கட்ட தகவல்களின்படி பல கர்ப்பிணிகள் ரத்த சோகை, ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என தெரிகிறது. இந்த இறப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்திற்கு இடையில் நிகழ்ந்துள்ளன.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் (பஞ்சாப்) மருத்துவர் வினீத் நாக்பால், "மூன்று மாதங்களில் 87 கர்ப்பிணிகள் உயிரிழப்பு என்பது கவலைக்குரிய விஷயம். இந்த இறப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களும் நிலைவேற்றப்பட்டு வருகிறது. அந்த திட்டங்களில் முக்கியமான ஒன்று கர்பகால இறப்பை குறைப்பது" என கூறினார்.
இதையும் படிங்க: திறமையான பணியாளர்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறும் - பிரதமர் மோடி