ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்பவரது மனைவி மௌனிகாவுக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பின்னர், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மௌனிகா உயிரிழந்தார். இதையடுத்து, மௌனிகாவின் பெற்றோர் குழந்தையைப் பராமரித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி, கோபி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாமியார் மானமார் தனது குழந்தையைச் சட்டவிரோதமாக வைத்துள்ளதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கோபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் குழந்தை பிறந்ததிலிருந்து கவனித்து வருவதாகவும், தங்களது மகள் இறந்தபிறகு பணப்பலன்களைப் பெறுவதற்காகவே குழந்தையைக் கேட்பதாகவும், மௌனிகாவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குழந்தையை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கோபி நிரூபிக்கவில்லை என்றும், குழந்தையின் நலனில் கோபி அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்றும் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குழந்தையை ஒப்படைக்கக்கோரி மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், தாத்தா பாட்டியின் கவனிப்பில் இருக்கும் குழந்தையை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்று பார்க்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: தமிழக பெண் கேரளாவில் நரபலி... 2 பேரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம்...